search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "சேர்வலாறு அணை வறண்டது"

    சேர்வலாறு அணையில் எஞ்சியிருந்த தண்ணீர் பாபநாசம் கீழ் அணை வழியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்படுவதால் சேர்வலாறு அணையில் நீர்மட்டம் குறைந்து சகதி மட்டுமே 19.68 அடிக்கு உள்ளது. #Servalardam
    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. நம்பியாறு அணை பகுதியில் இன்று காலை வரை அதிகபட்சமாக 35 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    திருக்குறுங்குடி நம்பியாறு பகுதியில் நேற்று இரவு சூறைக்காற்றும் வேகமாக வீசியது. அம்பையில் 11.4 மில்லி மீட்டரும், நாங்குநேரியில் 18 மில்லி மீட்டரும், மணிமுத்தாறு அணை பகுதியில் 2 மில்லி மீட்டரும், சேரன்மகாதேவியில் 3 மில்லி மீட்டரும், கருப்பாநதி அணை பகுதியில் 1 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது. மற்ற பகுதிகளில் லேசாக சாரல் மழை பெய்தது.

    பாபநாசம் அணைக்கு வினாடிக்கு 20.02 கன அடி தண்ணீர் மட்டுமே வருகிறது. அணையில் இருந்து கால்வாய்களில் வினாடிக்கு 20 கன அடி தண்ணீர் திறந்து விடப்படுகிறது. தென்மேற்கு பருவமழையில் சேர்வலாறு அணை முழு கொள்ளளவும் நிரம்பியது. இந்த நிலையில் சேர்வலாறு அணையில் இருந்து எவ்வளவு தண்ணீர் பாபநாசம் அணைக்கு அனுப்ப முடியுமோ அவ்வளவு தண்ணீர் பாபநாசம் அணைக்கு அனுப்பப்பட்டது.

    இதனால் பாபநாசம் அணையில் தற்போது 106.90 அடி நீர்மட்டம் உள்ளது. சேர்வலாறு அணையில் எஞ்சியிருந்த தண்ணீர் பாபநாசம் கீழ் அணை வழியாக தாமிரபரணி ஆற்றில் திறந்து விடப்பட்டது. இதனால் சேர்வலாறு அணை நீர்மட்டம் வேகமாக இறங்கி நேற்று முன்தினம் 51 அடியிலும், நேற்று 34.51 அடியாகவும் நீர்மட்டம் குறைந்தது. அது இன்று முற்றிலும் குறைந்து சகதி மட்டுமே 19.68 அடிக்கு உள்ளது.

    பொதுப்பணித்துறை அதிகாரிகள் அணையில் தண்ணீர் எதுவும் இல்லை என்றும் நீர் இருப்பு விபரத்தில் தெரிவித்துள்ளனர். இதனால் சேர்வலாறு அணை இந்த ஆண்டில் 3-வது முறையாக வறண்டுள்ளது. அங்கு பராமரிப்பு பணி நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இதுகுறித்து அதிகாரிகள் அதிகாரப் பூர்வமாக எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.

    மணிமுத்தாறு அணையில் இன்று 84.65 அடியாக நீர்மட்டம் உள்ளது. இதுபோல மற்ற அணைகளில் நீர்மட்டம் நேற்றைய அளவிலேயே தொடர்கிறது.

    நெல்லை மாவட்டத்தில் இன்று காலை வரை பெய்த மழை அளவு விபரம் மில்லி மீட்டரில் வருமாறு:-

    நம்பியாறு-35, நாங்குநேரி-18, அம்பை-11.4, சேரன்மகாதேவி-3, சங்கரன் கோவில்-2, மணி முத்தாறு-1.8, பாளை-1.4, கருப்பாநதி-1 #Servalardam

    ×